திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் காப்புகாடு நீலிகொல்லி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நீலிக்கொல்லி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பூங்குளம் பகுதியை சேர்ந்த சேட்டு மற்றும் மிட்டூர் அடுத்த மல்லாண்டியூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இருவரும் வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, மற்றும் ஹெட் லைட் மருந்து, இரும்பு கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.