விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. டி.ஐ.ஜி பொன்னி நேரில் விசாரணை நடத்துகிறார்.
என்ன முன்விரோதம்?
திமுக மகளிரணி துணை அமைப்பாளரும், திருச்சுழி வட்டம், உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியுமான ராக்கம்மாள், கடந்த மார்ச் 12-ஆம் தேதி குடும்பப் பிரச்சினையால், உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சுழி காவல்நிலையம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது. இந்தக் கொலைவழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை ஜாமீனில் வெளிவந்து திருச்சுழி வட்டம், குலசேகரநல்லூரைச் சேர்ந்த தனது உறவினரான ரத்தினவேல் பாண்டியன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சபரிமலையும் ரத்தினவேல் பாண்டியனும் அருப்புக்கோட்டை காந்தி நகர் அருகிலுள்ள புதர்க்காட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த இரட்டைக்கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்று நள்ளிரவில் இருவரது சடலங்களையும் அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், கொலை நடந்த இடத்தில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் வந்து ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார். நடந்த இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர குற்றப்பிரிவு காவல்துறையினர், உடையனாம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, மற்றும் சிவகாசியைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன் பெரியசாமி, சுந்தர்ராஜ் மகன் குருசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த இரட்டைக்கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் உடையனாம்பட்டி ராக்கம்மாளின் மகன்களான சூரியபிரகாஷ், ஜெயப்பிரகாஷ், மற்றொருவரான முகேஷ்குமார் ஆகிய மூவரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், இக்கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதி வழக்குப்பதிவு செய்து 5 பேரைத் தேடிவரும் நிலையில், மதுரை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சரணடைந்த மூவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.