திருக்கோவிலூர் அருகே கடம்பூர் என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் லாலாபேட்டையை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியும் எதிரே வந்த பெரிய லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பள்ளி மாணவர்கள் தமிழரசன், பொன்மனச் செல்வன், மாணவி மகாலட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் அங்கு நின்ற 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
![Lorries](http://image.nakkheeran.in/cdn/farfuture/TYOuKJbg0YIxPukuti3INnF2euhbj4BbDaugjrer_3I/1571028864/sites/default/files/inline-images/d321_2.jpg)
படுகாயம் அடைந்தவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் ரிஷிவந்தியம் போலீசார் மேற்பார்வையிட்டு விசாரணை செய்தனர். இந்த விபத்தினால் ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவிகள் இறந்ததும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருக்கோவிலூர் சங்கராபுரம் சாலையில் உள்ளது விபத்து நடந்த கடம்பூர். இந்த சாலையில் பல்வேறு வளைவுகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. மேலும் சம்பவம் நடந்த கடம்பூர் என்ற இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே நெடுஞ்சாலை துறை மேற்படி சாலையில் உள்ள அபாயகரமான விளைவுகளை சரி செய்து விபத்துகளை குறைக்க தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா?