திருச்சி உறையூரில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டு ரூ. 1,500 பறித்த சம்பவத்தில் மணிகண்டன (22) என்பவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில், பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், அடிதடி மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த வழக்கு உட்பட 10 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அதேபோல், கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட வ.உ.சி தெருவில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஹேமேஷ்வரன்(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில், ஹேமேஷ்வரன் ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு, குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திய வழக்கு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அரிவாளால் தாக்கிய வழக்கு உட்பட 6 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மணிகண்டன் மற்றும் ஹேமேஷ்வரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.