Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு; தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

 

Twist in Gokulraj case; The High Court upheld the conviction

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23). இவர், கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, தலை வேறு, உடல் வேறாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் உடலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளம் அருகே வீசிவிட்டுச் சென்றது.  அவர், தன்னுடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப்  பழகி வந்தார். இதைப் பிடிக்காத, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கோகுல்ராஜை  கடத்திச்சென்று சாதி ஆணவக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 

இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது ஒருவர் கொல்லப்பட்டார்; பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மற்ற 15 பேரை மட்டும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. இவர்களில் 5 பேர் விடுதலை  செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்ததோடு, அவர் இறுதிமூச்சு உள்ளவரை சிறையிலேயே கழிக்க  வேண்டும் என்று தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்கக்கோரி அவரும் மேல்முறையீடு செய்துள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட காலகட்டத்தில் யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சி சொன்ன கோகுல்ராஜின் தோழி  சுவாதி, வழக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சியமாக மாறினார். இதனால் அவர் மீது, மதுரை உயர்நீதிமன்ற கிளையே தாமாக முன்வந்து  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தீர்ப்பில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோகுல்ராஜ்- கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவும் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யுவராஜ்க்கு வழங்கப்பட்ட ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்ற தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !