TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்' என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Advertisment

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு செம்மண்டலம் குண்டு சாலையில் உள்ள பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக அந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 முதல் 2016 வரையிலும், 2016 முதல் 2021 ஆண்டு வரையிலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. இதனால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகச் சமுதாய நலக் கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், "சமுதாய நலக்கூடத்தினை திறந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பூட்டியே கிடக்கும் சமுதாய நலக்கூடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்" என்று கோரிக்கைகள் எழுந்தன.

TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் சமுதாய நலக் கூடத்தில் இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. அதில் நல்ல நிலையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை அரசு அலுவலகங்கள் போன்ற பிற பயன்பாட்டிற்கும் பழுதடைந்தவற்றைச் சரிசெய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வட்டாட்சியர் பலராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடலூர் செம்மண்டலம் சமுதாய நலக் கூடத்திலிருந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஊழியர்கள் வாகனங்கள் மூலம் ஏற்றி கடலூர் டவுன்ஹாலில் உள்ள சிறிய அறைக்கு மாற்றினர். பழுதடைந்த தொலைக்காட்சிகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சமுதாய நலக் கூடத்தினை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி இருந்ததால் அந்த கட்டடம் தற்போது பழுதாகி உள்ளது. சமுதாய நலக் கூடத்தில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்து காணப்படுகின்றன. அதைச் சுற்றிலும் முள் செடிகள், கொடிகள் படர்ந்துள்ளன. இவைகளை அகற்றி, கட்டிடங்களைப் புதுப்பிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள ரெட்டியார்சத்திரம் கட்டிடம், கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 7,619 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் அனைத்தையும் சீர்செய்து விடுபட்ட நபர்களுக்கு வழங்கவும், அல்லது அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவைகளுக்கு உபயோகப்படுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.