பில்லி, சூனியம், தோஷம் போக்குதல் என்று சொல்லிக் கொண்டு பணத்திற்காக தனியே இருக்கும் பெண்களைக் குறி வைத்து மோசடிப் பேர்வழிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் நகர் பகுதியில் உலா வருவது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
சாத்தான்குளம் நகரின் மையப் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் ராமலிங்கம் வேலைக்கு சென்றிருந்தபோது அவரது மனைவி முத்து ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். பட்டப் பகல் நேரம். அப்போது காவி உடை அணிந்து வந்து மூன்று பேர் முத்து ஜோதியிடம் உங்கள் வீட்ல தோஷம் உள்ளது. அதைப் போக்கணும். அதனால 7 சாமியார்களை வர வச்சி அவர்கள் மூலமா தோஷத்தக் கழிச்சாத்தான் உங்களுக்கும் ஒங்க வீட்டுக்கும் நல்லது நடக்கும். குடும்பத்துக்கான ஆபத்தும் விலகும் என்று சொல்லியுள்ளனர். அதோடு 7 சாமியார்களுக்கும் 3 ஆயிரம் வீதம் மொத்தம் 21 ஆயிரம் செலவு ஆகும் என்று அவரிடம் தெரிவித்துள்ளனராம்.
இதைக் கேட்ட முத்து ஜோதி தோஷம் கழிக்க மறுத்திருக்கிறார். ஆனாலும் விடாத மர்ம காவி நபர்கள், உடனடியாக தோஷம் கழிக்கலைன்னா பெரிய ஆபத்தே ஏற்படும்னு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் மிரண்டு போன அப்பாவி முத்து ஜோதி 3 சாமியார்களை வரவழைத்து தோஷம் கழித்தால் போதும் என்று கூறி 9 ஆயிரத்தை மர்ம நபர்களிடம் வழங்கியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டவர்கள், அருகில் உள்ள கடைக்குப் போய்ட்டு உடனே வந்து விடுவோம். உங்கள் கணவர் வீட்டிற்கு வந்தவுடன் பரிகாரத்தை ஆரம்பிச்சிடுவோம் என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளனராம்.
இந்த விவரங்களை தன் கணவரிடம் போனில் அவர் தெரிவிக்கவே, உடனே ராமலிங்கமும் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் பரிகாரம் போக்குவதாக சொல்லி பணத்தை வாங்கிய 3 மர்ம காவி நபர்களும் திரும்பி வராமல் போன பிறகு தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பதறிய ராமலிங்கம், உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். எஸ்ஐ சுரேஷ்குமார் விசாரணை செய்திருக்கிறார். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் சாத்தான்குளம் நகர வர்த்தக சங்கம் சார்பில் பஜாரில் பொருத்தப்பட்டுள்ள வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். தோஷம் கழிப்பதாக பணத்தை வாங்கிச் சென்ற 3 மர்ம காவி நபர்கள் பைக்கில் தப்பிச் செல்வது தெரிய வரவே அதனடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த நபர்கள் பற்றிய முக்கியமான நம்பர் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று காவல் நிலைய போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்களின் இயல்பான மன பயமான சென்ட்டிமெண்ட்டைப் பயன்படுத்திக் கொண்டு பில்லி, சூனியம், தோஷம் கழிப்பதாக சொல்லிக் கொண்டு வீடுகளுக்கு வரும் மர்ம நபர்களிடம் பொது மக்கள் ஏமாற வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.