தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழர்கள் இந்தி கற்காமல் போனதும், மாணவர்களை திமுக இந்தி படிக்க விடாமல் தடுத்ததும் தான்" என பேசி இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியின் "அக்னிப் பரிட்சை" நிகழ்ச்சியில் பேசும் போது கர்மவீரர் காமராஜருக்கு இணையானவராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்வதாகவும் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை திருப்தி படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து "தனது வாயில் வருவதை எல்லாம் வாந்தி எடுப்பதை" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டிக்கிறோம்.
அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்களை எல்லாம் அமைச்சர்களாக்கி அழகு பார்த்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அவர் பயணிக்கும் காரின் டயரை பார்த்தும், வான்வெளியில் பறக்கும் ஹெலிகாப்டரை பார்த்தும் கும்பிடு போட்டு வாழ்க்கை நடத்திய அமைச்சர் பெருமக்கள் தற்போது தங்களின் பொறுப்பையும் மீறி பேசுவது என்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மொழிப்போர் தியாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.