தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் என்ற பகுதியில் உரத் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அமோனியா உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கண்ணாடி போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் இன்று (30.08.2024) வழக்கம் போல் தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரிஹரன், ஹரி பாஸ்கர் என்ற பணியாளர்கள் ஆலையில் பணியில் இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்து திடீரென எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹரிஹரன் என்ற பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனராஜ், மாரிமுத்து ஆகியோர் ஸ்பிக் மருத்துவமனையிலும், விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதே சமயம் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.