Skip to main content

டிடிவி தினகரனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

DTV Dinakaran interrogated for more than 8 hours!

 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் இன்று (12/04/2022) பகல் 12.00 மணியளவில்  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக ஆஜரானார். அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

விசாரணையானது சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகரிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அதில், சுகேஷ் சந்திரசேகர் தனக்கு டிடிவி தினகரன் ரூபாய் 10 கோடி கொடுத்ததாக விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என்றும், அவரிடம் நான் எந்தவொரு பணத்தையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட அடுத்தக்கட்ட விசாரணையில் டிடிவி தினகரன் ரூபாய் 50 கோடி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னிடம் ரூபாய் 25 கோடியும், தனது மனைவியிடம் ரூபாய் 25 கோடியும் கொடுத்ததாக அவர் கூறினார். 

 

இதன் அடிப்படையில், டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில், சுகேஷ் சந்திரசேகர் மாற்றி மாற்றி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் டிடிவி தினகரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்