சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கூட்டணியின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் கள்ள ஓட்டு போடவந்த பா.ம.க.வினரை தட்டிக் கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வாக்குச்சாவடி முகவர்களான 10வது வார்டு கழகச் செயலாளர் திரு.குணசேகர், 8வது வார்டு கழகச் செயலாளர் திரு.நித்யா, மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் திரு.தட்சிணாமூர்த்தி மற்றும் நெமிலி பேரூராட்சிக் கழக துணைச்செயலாளர் திரு.திருநாவுக்கரசு ஆகியோர் மீது காவல்துறையினர் கண்ணெதிரே கொலைவெறித் தாக்குதல் நடந்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபற்றி அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக மவுனம் காத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கழக வேட்பாளருடன் வந்த கார்கள் மீதும் பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தியதையும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.