முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 24 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பிலிருந்தும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியில் வரும் பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காரில் இருந்த உதயநிதியை சூழ்ந்தனர்.
அப்பொழுது பெண் ஒருவர் ''சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி எடப்பாடி பழனிசாமி. அவர் கட்சிக்கு வேணாம். அவரை கைது செய்யுங்க. எடப்பாடி பழனிசாமிய கைது செய்யுங்கள். கொடநாடு வழக்கை விசாரிக்கிறேன்னு சொன்னீங்க... அதேபோல ஜெயலலிதாவின் உயிரிழப்பு குறித்து விசாரித்து நீதியை நிலைநாட்டணும். எடப்பாடிய நீக்கிடணும் ஐயா'' என கோரிக்கை வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ''கட்சியை ஒடச்சி வேடிக்கை பார்க்கிறார். கட்சியை அவர் மட்டும் கைப்பற்றிக் கொண்டார். எடப்பாடி என்ன ஜெயலலிதாவா இல்ல எம்ஜிஆரா. ஓபிஎஸ் என்ன தப்பு செய்தார். இடையில் வந்த எடப்பாடிக்கும் அதிமுகவுக்கு சம்பந்தமே கிடையாது'' என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.