திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகரத்தில் உள்ள 128 பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், “பள்ளி பருவம் கல்வி கற்க மட்டுமல்ல, ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும்தான். பள்ளி பருவத்தில் கவனச்சிதறல் கூடாது. போதை பழகத்ததை பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாததால் போதைக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள். ஆசிரியர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். எல்லோரும் ஒன்றாக கூட்டு முயற்சி எடுத்து போதை இல்லா மாநகரமாக திருச்சியை மாற்ற உறுத்திக்கொள்வோம்.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்தியேக வாட்ஸ் ஆப் 96262-73399 என்ற எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100, 1098 மற்றும் 14417 தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். திருச்சி மாநகரில் இதுபோன்று போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இளைஞர்களுக்குப் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.