Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர், அவரது தாய் கைது!

Published on 05/09/2024 | Edited on 05/09/2024
Trichy Melapudur area BISHOP HYMAN MEMORIAL PRIMARY SCHOOL incident

திருச்சி மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இது அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியாகும். இங்குக் கிட்டத்தட்ட 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. வெளியூரைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன்டேனியல். இவருக்கு 31 வயதாகிறது.. லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல அடிக்கடி வந்து செல்வாராம் டேனியல். அந்தவகையில், கடந்த 6 மாதங்களாகவே, ஹாஸ்டல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையை டேனியல் தந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணுக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான், டாக்டர் டேனியல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியரும், டேனியலின் அம்மாவுமான கிரேஸ் சகாய ராணிக்கு 53 வயதாகிறது. தன்னுடைய அம்மா பள்ளியின் தலைமை ஆசிரியையாக உள்ளதால், ஹாஸ்டலுக்குள் எப்போது வேண்டுமானாலும் சென்றுவருவதை டாக்டர் டேனியல் வழக்கமாக வைத்திருந்துள்ளார். தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், விடுதிக்குள் சென்று வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே, மாணவிகளுக்கு டேனியல் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், வெளியே சொல்வதற்கும் மாணவிகள் பயமும், தயக்கமும் காட்டியதாகத் தெரிகிறது. ஆனால், டாக்டரின் சேட்டைகளும், அத்துமீறலும் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் மற்றும் வார்டனிடமே புகார் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பிறகுதான், புகார்கள் சென்றுள்ளன. மேலும், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் அனுமதி பெறாமலேயே இந்த ஹாஸ்டல் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அங்கிருந்து மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் டேனியல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குற்றத்தை மறைத்ததாகக் கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தாயும், மகனும் ஒன்றாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாம்சன் டேனியில் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.