![Trichy Dt Manaparai near CbSe School incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/iRYPr5DPIzZxdsZe_IedKsHqdb3aPV0gsgYgvZhOCqQ/1738893503/sites/default/files/inline-images/our-arrest-art_39.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு சுதா என்பவர் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும், பள்ளியின் அறங்காவலருமான வசந்தகுமார் (வயது 54) 4ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று வசந்த குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். அதோடு வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில் வசந்தகுமார் வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். அதோடு வகுப்பறையின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தொடர்ந்து வசந்தகுமாரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரைக் கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் திருச்சி - திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு என்ற இடத்தில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி வருண் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சுதா உள்ளிட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளியின் வகுப்பறையில் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.