
கே.கே. செல்வகுமார் என்பவர் ஒரு அமைப்பின் தலைவராக இருந்துவருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திருச்சியின் பல்வேறு பகுதிகளில், செல்வக்குமார் தேடப்படும் குற்றவாளி எனச் சுவர் விளம்பரங்கள் மற்றும் இணையதளம் மற்றும் முகநூல் வாயிலாக அவர் குறித்த தகவல்களைத் தரச் சமயபுரம் காவல் நிலையத்தை அணுகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் விசாரித்தோம். அவர், “இந்த சுவர் விளம்பரம் மற்றும் இணையதளம் மூலம் பரப்பப்படும் இந்த செய்திகள் முற்றிலும் தவறானது. அவர் மீது வழக்குகள் இருந்தாலும், காவல்துறை ஒருபோதும் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடாது. பொதுவாக சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது உருவாகி வரும் இந்த விளம்பரத்தை அவர்களும் வெளியிடவில்லை. எனவே தற்போது இணையதளங்களில் உலாவி வரும் இந்த விளம்பரமானது முற்றிலும் பொய்யானது. இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.