தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சங்கம் இணைந்து நடத்திய மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர். சீதாராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி உதவி ஆணையர்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், திருச்சி மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் தாமோதரன், அமைச்சு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி, வருவாய் உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாநகராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசால் 20-10-2022 கொண்டுவரப்பட்ட அரசாணை எண் 152-படி பிரிவு சி உள்ளிட்ட 20 வகையான பணியிடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை காரணமாக 20 மாநகராட்சிகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்த நிலையில் தற்போது 3417 ஆகக் குறைக்கப்பட்டது. ஆகவே தமிழக அரசு புதிதாகத் திணித்துள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கான பணி விதியை மாற்ற வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு முழுமையான விபர அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அதனை அரசு ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் என்றால் நீதிமன்றத்தை நாடுவது, போராட்டத்தை முன்னெடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.