/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy-police-art_0.jpg)
திருச்சியில் நேற்று ஜோசப் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நான்கு மணி நேரத்தில் நகை கொள்ளை அடித்த பரணிக்குமார்(வயது 22), சரவணன் (வயது 22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, "கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் ஏற்கனவே 18 வழக்குகளில் தொடர்புடையவர்கள் மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படையினர் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில் இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நபர்களிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரை பொறுத்தவரை இந்த வருடத்தில் மட்டும் கொலை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர்ந்து கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார். இந்த பேட்டியின் போது மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)