திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பாக எங்கள் தொகுதியை எம்பியை கண்டுபிடித்து தர சொல்லி கொடுத்த புகார் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அரசியல்வாதி திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 3 இலட்சத்திற்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். புதுக்கோட்டையை சேர்ந்த அவர் திருச்சியில் எம்.பி. அலுவலகம் இல்லாதால் திருச்சி மக்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘எங்க எம்பியை காணோம்.. கண்டுபிடித்து தாருங்கள்’ என்கிற புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் சம்சுதீன், திருச்சி அரியமங்கலம் கோட்டம் 29 வார்டில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் சாலை வசதி என்பது கிடையாது. அண்ணா நகர் பகுதியிலிருந்து தஞ்சை பிரதான சாலைக்கு செல்லக்கூடிய இந்த சாலைக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இன்று சாலை வசதி கேட்டு போராடி வருகிறோம்.
தற்போது புதுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசர் திருச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மூலம் இந்த சாலை வசதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது. காரணம் அவரைப் பார்க்க செல்லலாம் என்றால் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை . ஆகையால் தொகுதியை விட்டு காணாமல் போய்விட்டார். எனவே அவரை விசாரித்து இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து காணாமல் போன எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் செய்துள்ளோம் என்றார்.