Tribal women pass judge exam Appreciation of CM MK Stalin

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்ப பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம்ஸ்ரீபதி கருவுற்று இருந்தார். எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று நினைத்த ஸ்ரீபதிக்கு, தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்தது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

Advertisment

சற்றும் மனம் தளராத ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக குழந்தை பிரசவமான பெண்களுக்கு அவரது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப சில வாரங்களாகும். தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். வலிகளுக்கு இடையே தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப உறவினர்களும் கூட தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

Advertisment

நீண்ட உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது போன்று சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. பெரும் பதற்றத்துடன் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீபதிக்கு தேர்வின் முடிவு சாதகமாக அமைந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார் மரியாதைக்குரிய நீதிபதி ஸ்ரீபதி.

Tribal women pass judge exam Appreciation of CM MK Stalin

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

Advertisment

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில். நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!. பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண் டும்வைய மேலே!”எனக் குறிப்பிட்டுள்ளார்.