
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் வடக்கு வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹேமர்னா (6) என்ற மகள் இருக்கிறார். கார்த்திகேயேனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த வாரம் குடும்பத்துடன் மைசூருக்கு சிகிச்சை பெறச் சென்றார்.
அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலின் கதவு இடுக்கில் ஹேமர்னாவின் கைவிரல் சிக்கியது. இதில் கை விரலில்காயம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (27.01.2021) கோவைக்குத் திரும்பியஅவர்கள் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் ஹேமர்னாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமர்னா இறந்துவிட்டதாக முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், ‘கையில் அடிபட்டு வந்த குழந்தை எப்படி இறந்து போகும்?நன்றாகத்தானே இருந்தது’ என்று கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் சரியாக பதில் அளிக்காததால், இதுகுறித்து நேற்று இரவு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை ஹேமர்னா இறந்துவிட்டதாக புகார் அளிக்க, புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி, கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதே நிர்வாகத்தைச் சேர்ந்த சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஏற்கனவே சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த சூழலில், மீண்டும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் கையில் அடிபட்ட காயத்திற்கு வந்த ஆறு வயது சிறுமி இறந்த சம்பவம் கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் அடிபட்டால் உயிர் போகுமா? என மருத்துவமனை மேல் கொந்தளிக்கிறார்கள் கோவை மக்கள். இதுகுறித்து கேட்க ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் அங்கிருந்து நம் காதுகளுக்கு வரவேயில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)