Skip to main content

ரயிலில் ஓசி பயணம்; ஒரே மாதத்தில் 1.30 கோடி ரூபாய் அபராதம்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

 travel by train; A fine of 1.30 crore rupees was collected in a single month!

 

சேலம் கோட்டத்தில், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.30 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

 

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரை கண்காணிக்க பயணச்சீட்டு பரிசோதகர்கள் தலைமையில் அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்படும்.

 

இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் மேற்கொண்ட பயணிகள், பொதுப்பெட்டி டிக்கெட்டை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தவர்கள், அதிக  பார்சல் கொண்டு வந்த பயணிகள் உள்பட 17,776 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1.30 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. 

 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு ஓசியில் பயணம் செய்வோருக்கு, அவர்கள் எடுக்க வேண்டிய டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும். 

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஓசியில் பயணம் செய்தோர் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறி செயல்பட்ட பயணிகளிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்