Skip to main content

சில்லறை கொடுப்பதில் பெண்ணிடம் தகராறு! ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!  

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Transport workers struggle not to give way to ambulances!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்தது. ஓட்டுநர் கதிர்வேல் பேருந்தை ஓட்டி வர, சு.கீணனுாரை சேர்ந்த மணிகண்ணன்(29) என்பவர் நடத்துநர் பணியில் இருந்தார். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அதற்கு நடத்துநர் மணிவண்ணன், சில்லரை இல்லை என்றதுடன் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பேருந்து விருத்தாசலம் வந்த நிலையில் அந்தப் பெண் நடத்துநர் மணிகண்டனிடம் சில்லறையை கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் மணிகண்டன் அந்த பெண்ணை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் மனமுடைந்த அந்த பெண், விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு பேருந்தில் நடத்துநர் நடந்து கொண்ட முறை குறித்து தனது உறவினர்களிடம் கூறி, கதறி அழுதுள்ளார். இதன்காரணமாக மாலை 5:30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர் நடத்துநர் மணிகண்டனை ஆபாசமாக திட்டி, தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். 

 

இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்  விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட நடத்துநர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிறிது நேரத்தில் நடத்துநர் மணிகண்டன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாரிடமும் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் தொடர்ந்த போராட்டத்தின் இடையே இரவு 8:00 மணியளவில் அப்பகுதியில் திடீர் கனமழை பெய்தது.


இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அருகே இருந்த கடைகளில் ஒதுங்கி நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் இதனை பயன்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்ற பொதுமக்களும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். 


இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நடத்துனரை தாக்கிய சம்பவத்தால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் மீண்டும் விருத்தாச்சலம் பணிமனை 1, 2க்கு கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளும், காவல் துறையினரும் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்