Skip to main content

"இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துத்துறை தகவல்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

24 hrs transports operating tn govt announced

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்.  பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் மாநகரப் பேருந்துகள் நாளை (09/05/2021) இரவு 09.00 மணி வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இதனிடையே, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றும் நாளையும் மாலை 06.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதுகிறது. நாளை மறுநாள் முதல் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் விற்பனை நேரம் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.