சென்னை, தாம்பரம் அடுத்த புதூர் மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சஞ்சனா. இவருக்கு 28 வயதாகிறது. இவரது சித்தப்பாவான தீனதயாளன் என்பவரும் மூன்றாம் பாலினத்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெருக்கூத்து தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எந்த இடத்திற்குத் தொழிலுக்குச் சென்றாலும் சஞ்சனா மற்றும் தீனதயாளன் ஆகியோர் ஒன்றாகச் செல்வதே வழக்கம். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வந்தனர்.
அந்த வகையில், கடந்த 13 ஆம் தேதி இரவு சஞ்சனா தனது சித்தப்பாவான திருநங்கை தீனதயாளனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் தெருக்கூத்துக்குச் செல்ல வேண்டும் என அவரை அழைத்துள்ளார். அதற்கு தீனதயாளன், “எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் வரவில்லை” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சஞ்சனாவும் தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சஞ்சனா வழக்கம்போல் தீனதயாளனை செல்போனில் தொடர்புகொண்ட போது அவரது நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்துள்ளது. இதனிடையே, தீனதயாளன் வேறு வேலைக்காகச் சென்றிருக்கலாம் என சஞ்சனா நினைத்துக்கொண்டார்.
இத்தகைய சூழலில், தீனதயாளனின் அண்ணனான முத்துப்பாண்டி என்பவர் சஞ்சனாவை தொடர்பு கொண்டு, “தீனதயாளன் நேற்றில் இருந்து வீட்டுக்கு வரவில்லை” எனக் கூறியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த சஞ்சனா, தீனதயாளனை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், மாம்பாக்கம் பிரதான சாலைக்கு அருகில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு தீனதயாளனின் இருசக்கர வாகனம் இருப்பதைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து, தீனதயாளன் அங்கே இருக்கலாம் என சுதாரித்துக்கொண்ட சஞ்சனா, அங்குள்ள கால்வாய் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, காலி மனைக்கு உள்ளே இருந்த கால்வாய் தண்ணீரில் காணாமல் போன தீனதயாளன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். ஒருகணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சனா, அந்த இடத்திலேயே கண்ணீர்விட்டுக் கதறியுள்ளார். அதன்பிறகு, அந்த இடத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடினர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது தீனதயாளன் தலை, கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் கத்தி குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீனதயாளனின் உடலை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், முதல் கட்ட விசாரணையில் திருநங்கை தீனதயாளனை மது அருந்த அழைத்துச் சென்ற சிலர் இந்தக் கொலையை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், கொலையாளிகள் பிடிபட்டால்தான் திருநங்கை தீனதயாளன் கொலைக்கான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர். தற்போது, தாம்பரத்தில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.