கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே பின்னலூர் கிராமத்தில் வீரநாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 1000- க்கும் மேற்பட்ட கிராமப்புற விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில்இயற்கையான முறையில் விதைகள் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் கடலூர் அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை முதுநிலை மாணவர்கள் கள ஆய்வுக் கல்வி பயிற்சி மேற்கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வீரநாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் சங்கத்தின் இயக்குநர் மற்றும் இயற்கை வேளாண் விவசாயி ரங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எவ்வாறு இயற்கையான முறையில் தரமான விதை உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.
விவசாயத்தில் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது, விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் எவ்வாறு லாபம் கிடைக்கிறது, தொழில் முனைவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும், மருந்தில்லா இயற்கை விவசாயம் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தும், பாரம்பரியமான முறையில் விவசாயம் செய்தால் நிலையான பொருளாதரம் மேம்படும் என்பதை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.
இந்நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி பொருளியல் துறைத்தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன், இணைப் பேராசிரியர் கோட்டை வீரன், உதவி பேராசிரியர் உண்ணாமலை, வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் சங்க இயக்குநர்கள் ராஜேந்திரன், குமார், வேல்முருகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு விவசாயத்தில் பொருளாதார மேம்பாடுகள் குறித்துப் பேசினர்.