
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் ஈராண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலை பட்டயம் ஆகிய பட்டயப் படிப்புகளில் பயின்று வரும் 29 மாணவ, மாணவிகளுக்கு "மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல்" என்ற பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் குறித்து தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள இராஜராஜன் அகழ்வைப்பகத்தில் 01.06.2023, 02.06.2023 மற்றும் 03.06.2023 ஆகிய 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஞாயிற்றுக் கிழமை (04.06.2023) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத் தளத்திற்கும் மாணவர்களை அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னும் சிதிலமடையாத சங்ககால கோட்டைச் சுவர்கள், கொத்தளம் ஆகியவற்றை காண்பித்து அகழாய்வு நடக்கும் சங்ககால கோட்டையின் பகுதி மற்றும் முழு பகுதி அடங்கிய படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கம் கூறப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு குழிகளில் தென்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் பற்றியும் அகழாய்வு செய்யும் முறைகள், பாதுகாப்பு முறைகள் பற்றியும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் கூறப்பட்டது.

பயிற்சியின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் முனைவர் இரா.சிவானந்தம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கி.பாக்கியலட்சுமி, பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை, அ.சாய்பிரியா, சு.மூ.உமையாள், இரசாயனர் ச.செந்தில்குமார், மற்றும் தொல்லியல் அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் கூறும் போது, 'பாடப்புத்தகங்களில் படிப்பதைவிட இது போன்ற இடங்களில் நேரடியாக பயிற்சி பெறுவது சிறப்பாக உள்ளது. சங்ககால கோட்டை, கொத்தலம், அகழி ஆகியவற்றை முழுமையான காணமுடிந்தது' என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)