Skip to main content

25 கி.மீ வரை வாலிபரின் உடலை இழுத்து வந்த ரயில்; காட்பாடியில் பரபரப்பு சம்பவம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
train dragged the boy body for 25 km

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம்(17.6.2024) நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது ரயில் இஞ்சின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்தது. இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனைக் கண்டு கீழே இறங்கிய இஞ்சின் டிரைவர் இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் இரயில் இஞ்சினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும்  துண்டாகி இருந்தது மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயம் பட்டிருந்தது.

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற  பேண்ட் அணிந்திருந்தார். இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை மேலும் எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டதால், காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர் .

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இஞ்சின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இஞ்சினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார். சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின் பிணம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சுமார் 25 கிலோமீட்டர் இஞ்சினில் வாலிபர் உடல் இழுத்து வந்த சம்பவம்  காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அவதி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Residents suffer due to stagnant rainwater in railway tunnels

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட காட்பாடி அடுத்த பெரிய பட்டரை பகுதியில் காட்பாடியில் இருந்து அருப்புமேடு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும். அங்குள்ளவர்கள் மருத்துவமனை, கோவில், நீதிமன்றம், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த காட்பாடிக்கு தண்டவாளத்தின் மீது கடந்து  செல்லாமல் இருக்க அங்கு இரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பொதுமக்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக பெரியபட்டறை அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுமோ எனப் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

பொது மக்களின் நலனை கருதி மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.

Next Story

“ரயில் விபத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்” - காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

இந்நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளில் இழப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தப் பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயர நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி  கேமராவால் இயக்கப்படும் சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும். மேலும் இந்திய ரயில்வேயைக் கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.