
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி துவங்கியது. கரோனா பரவல் காரணமாக முன்புபோலவே சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (24.06.2021) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், ''என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு; கருணாநிதியின் கொள்கை வாரிசு. ஆளுநர் உரை ட்ரெய்லர்தான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறோம்'' என பேசிவருகிறார்.