Skip to main content

ஒருதலை காதலால் பெண் மீது அரிவாள் வெட்டு; இளைஞர் கைது

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Tragedy of woman due to one-sided love; Youth arrested

 

சென்னை மேடவாக்கம் பகுதியில், காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை மேடவாக்கம், பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம் போல் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அந்த மாணவியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்பொழுது மாணவியிடம் அந்த இளைஞர் காதலை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய் என வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞர் மாணவியைத் துரத்தியுள்ளார். மாணவி உடனடியாக ஓடிச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்தும் பகுதிக்குள் பதுங்கியுள்ளார்.

 

விடாமல் துரத்திய அந்த இளைஞர் மாணவியைச் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அரிவாள் வெட்டில் ஈடுபட்ட இளைஞனைப் பிடிக்க முயன்றபோது அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாகத் தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

 

வெட்டுக் காயத்துடன் சாலையில் கிடந்த மாணவிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிக்கு கை மற்றும் இரண்டு தொடைப் பகுதிகளில் அரிவாள் வெட்டு பலமாக விழுந்துள்ளது. முகத்திலும் அடிப்பட்டுள்ளது. உடனடியாக மேல் சிகிச்சைக்காக மாணவியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் வசந்த் என்பதும், கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

 

தொடர்ந்து, அந்த இளைஞர் தன்னைக் காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்து வந்ததாக மாணவி தெரிவித்துள்ளார். அரிவாள் வெட்டில் ஈடுபட்ட வசந்த் என்ற இளைஞரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீலாங்கரை பகுதியில் இருந்த வசந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகை

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Union Minister Rajnath Singh visits Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (07.12.2023) சென்னை வருகிறார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார்.

 

இவருடன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இது குறித்துப் பேச உள்ளார். முன்னதாக புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் நிவாரணப் பணி; முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Miqjam' storm relief mission; Chief Minister M. K. Stalin's action order

 

‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாகச் சென்னை நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து கடந்த 4 ஆம் தேதி (04.12.2023) தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன், கூடுதல் அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி அமைச்சர் எஸ். ரகுபதி கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதே சமயம் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்