Skip to main content

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிறுவன் கடத்தல் சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Kidnapping incident; Ex-wife of IAS

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் தற்போது குஜராத்துக்கு விரைந்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது