Skip to main content

மகிழ்வித்த கலைஞனின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் சோகம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 The tragedy behind the demise of the delighted artist !!!

 

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.

 

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தனது உடல் மொழியையும் கலந்து மக்களை மகிழ்வித்து வந்தவர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த பாலாஜி நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடிய நிலையில், சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்தார்.

 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி. பொருளாதார பிரச்சனை காரணமாக அங்கிருந்து வேறு ஒரு சிறிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன்பின், வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு சீராக இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இந்நிலையில் இன்று வடிவேல் பாலாஜி (வயது 42) உயிரிழந்தார்.

 

 The tragedy behind the demise of the delighted artist !!!


மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் சேத்துப்பட்டில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரும் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மதியம் 2 மணிக்கு சேத்துப்பட்டில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அவருடன் பணியாற்றிய பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன்படி  சின்னத்திரையில் பிரபலமான அறந்தாங்கி நிஷா கூறுகையில், கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், கரோனா காரணமாக வீட்டிலேயே இருந்ததால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கரோனா பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும் அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சியில் தற்பொழுது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபொழுது அவர் இதை தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் நிஷா.

 

 The tragedy behind the demise of the delighted artist !!!


இப்படி ஏற்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவர் மட்டுமல்ல எங்களைப் போன்ற சின்னத்திரை பிரபலங்கள் மேடைகளில் உங்களைச் சிரிக்க வைக்கிறோம் ஆனால் எங்கள் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் சோகங்கள் உங்களுக்குத் தெரிந்தால் எங்களை அடுத்தமுறை பார்க்கும்போது உங்களுக்கே சிரிப்பு வராது. அது உங்களுக்கு தெரியாத வரைக்கும் தான் நாங்க நல்லா இருப்போம். நீங்க சிரிச்சுதான் நாங்க மூணு வேளை சாப்பிடுறோம். அதுபோன்ற வாழ்க்கைச் சூழல்தான் சின்னத்திரை கலைஞர்களுடையது. எங்களுக்கென்று சங்கம் இல்லை. பணம் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால், கடைசியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் இறந்தும் விட்டார்.

 

Ad

 

அதோடு அவர், அவரது மனைவி குழந்தைக்கு ஏதாவது சேர்த்து வைத்து உள்ளாரா என்பது கூட தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல சின்னத்திரையில் இருக்கும் எங்களைப் போன்றவர்ளுக்கும் அதே நிலைமைதான். கரோனா காலத்தில் இப்பொழுதுதான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்தான் எங்களுக்கு வருமானமே. அதைவிட்டால் வேறு வழியே இல்லை. அவருடைய மறைவு எங்களுக்கு இன்னும்கூட நம்ப முடியவில்லை. இது வதந்தி ஆக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் விசாரித்ததில் அவர் உண்மையாக இறந்துவிட்டதாக கூறிய பொழுது எனக்குச் சொல்ல வார்த்தைகளே இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் அவருடன் பணியாற்றிய பல்வேறு சின்னத் திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இறுதி இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்