Skip to main content

சட்ட விரோதமாக நிகழ்ந்த கருக்கலைப்பு; 17 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Tragedy befell a 17-year-old student at Illegal abortion in dindugal

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவருடைய பெற்றோர் இறந்துவிட்ட காரணத்தினால், திண்டுக்கல்லில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்தார். இவர், காந்திகிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் விடுதியில் தங்கி நோயாளிகளைப் பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை சந்திக்க திருச்சியில் வசிக்கும் அவருடைய அத்தை மீனாட்சி விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு மீனாட்சி சந்தேகமடைந்தார். அதன் பின்னர் அவர், மாணவியை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவியிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார். அப்போது, சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் கணக்காளராக வேலை செய்யும் ராம்குமார் என்பவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கல்லூரி விடுமுறையின் போது அம்பாத்துறையில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, தன்னுடன் ராம்குமார் தனிமையில் இருந்ததாகவும், அதனால் தான் கர்ப்பம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மீனாட்சி, மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி அவர், மாணவியை திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு, கடந்த இரு நாட்களுக்கு முன் மருத்துவர் கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால், பல மணி நேரமாகியும் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அங்குள்ள மருத்துவர்கள் மாணவியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (01-03-24) பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி சிறுமி என்பதால் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பற்றி குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் போலீசாருக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே மாணவியின் மூத்த சகோதரி, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், மாணவியின் காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மீனாட்சி மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகிய 3 பேர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எஸ்.பியின் அதிரடி உத்தரவு; சுற்றி வளைத்த காவல்துறை - சிக்கிய 28 பேர்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
28 people arrested for gambling with money in Dindigul

திண்டுக்கல் மாநகரையொட்டி உள்ள மீனாட்சிநாயக்கன்பட்டியில் இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸ், வத்தலக்குண்டு பைபாஸ், அஞ்சலி பைபாஸ், சீலப்பாடி பைபாஸ்  இப்படி நகர்ப்பகுதியைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், நகரில் கோவிந்தாபுரம்,  நாகல் நகர், பேகம்பூர், பஸ் ஸ்டாண்டு பகுதிகள் உள்பட சில இடங்களிலும் அரசு அனுமதியில்லாமல் அங்கங்கே சூதாட்ட கிளப்புகள் இரவு பகல் பாராமல்  படுஜோராக நடந்து வந்தன. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்கள் இந்தச் சூதாட்ட விடுதிகளுக்கு சென்று பல ஆயிரங்களை இழந்தும் வந்தனர்.  

இந்த விசயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் காதிற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கொண்டு சென்றனர். அத்துடன் எஸ்.பிக்கு  தனிப்படை போலீசாரும் தகவல் கொடுத்து இருந்தனர். அதைத் தொடர்ந்துதான்  எஸ்.பி உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர்  சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்நாராயணன், பூபதி மற்றும் சில காவலர்கள் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி அனுமதியில்லாமல் சூதாட்ட கிளப்புகளில் ரைடு நடத்தினர்.  அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள் சிலர் தப்பி ஓடியுள்ளனர். 

இருப்பினும், ஆண்கள் மற்றும் சூதாட்ட கிளப் நடத்தி வந்தவர்கள் உட்பட 28  பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஆனால் இதேபோல் நத்தம், வத்தலக்குண்டு,  வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், மேல்  மலைப்பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சில பகுதிகளில் அனுமதியில்லாமல் சூதாட்ட கிளப்புகள் படுஜோராகவும் நடந்து வருகிறது. அதேபோல் அனுமதியில்லாமல் சில்லிங் சென்டர்களும் அங்கங்கே நடந்து  வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்ட  அளவில் எஸ்.பி.பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக  ஆர்வலர்கள் வேண்டுகோளும் விடுத்து வருகிறார்கள்.

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அருளிடம் போலீசார் தீவிர விசாரணை!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Armstrong murder case; Arul police intensive investigation

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி எனப் பலரும்  கைது செய்யப்பட்டனர். அதே சமயம் பூந்தமல்லி சிறையில் இருந்த பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Armstrong case; Arul police intensive investigation

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து  விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நான்கு பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து செம்பியம் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலைக்கு சதி திட்டம் தீட்டிய பல்வேறு இடங்களுக்கும் அருளை அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி வழக்கறிஞர் அருளை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அருளை 2வது முறையாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.