/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_157.jpg)
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக - கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்நிலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் சில சமயம் வனவிலங்குகள் அடிபட்டு இறக்கும் சம்பவம் நடைபெற்றது. இதனை அடுத்து திம்பம் மலைப்பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து காலை 6 மணி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியதும் ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் முண்டியடித்துச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வந்ததாலும், கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக -கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட கிலோமீட்டர் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)