




நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் அருகே தொழிற்சங்க கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.