கோவை மதுக்கரையில் செயல்பட்டு வருகிறது ஏ.சி.சி சிமெண்ட் ஆலை. கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் தெரிவித்து சிமெண்ட் ஆலையை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.
உடனே ஸ்பாட்டுக்கு வந்த மதுக்கரை காவல்துறையினர் பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். புகை வெளிவருவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுப்போம் என அந்த சிமெண்ட் நிறுவனம் கூறியது. அதனால் முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி என்ற பெண்ணின் வீட்டிற்குள் யுவராஜ், கணேசன், ராஜாஜி என்ற மூன்று நபர்கள் புகுந்தனர்.
நீ போராட்டம் பண்றியா? என ஆபாச வார்த்தைகளை பேசியதோடு அவரை தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த காயத்ரியை அப்பகுதி மக்கள் அரிசி பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் கோபமுற்ற அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த மூன்று நபர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுக்கரை காவல் நிலையத்து முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் காவல்துறை உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என போராடிய பெண்களிடம், கண்டிப்பாக எப்.ஐ.ஆர். போட்டு கைது செய்வோம் என சொல்லியிருக்கிறார்கள் காவல் துறையினர்.