தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான கோயில்கள், சுற்றுலா தளங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகின்றன .
அதன் தொடர்ச்சியாக இன்று (05/08/2021) சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடுக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகள் உரிய ஆவணங்களைக் காண்பித்து ஏற்காடு செல்லலாம். பிற நாட்களில் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டி - பிசிஆர் கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக கொங்கணாபுரம் வாரச்சந்தையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.