Skip to main content

சிக்கிய ஒற்றை அமலாக்கத்துறை அதிகாரியால் வெளிவந்த மொத்த பூனைக்குட்டிகள் 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். 

 

முதலில் இதற்கு சுரேஷ்பாபு தர மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து திவாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக 51 லட்சம் ரூபாய் கண்டிப்பாக தரவேண்டும் என மிரட்டி உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி திவாரி. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையை கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவியே 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். 

 

லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் தலைமையில் கடந்த 12 மணி நேரமாக திண்டுக்கல் இ.பி காலனியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து திவாரியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் முடிந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி, மருத்துவரை மிரட்டி, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. பின்னர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரிகள் வந்தால் தான் சோதனைக்கு அனுமதிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரியான அங்கித் திவாரி அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் லஞ்ச பணமானது பிரித்து கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், இதேபோல் பலரிடம் மிரட்டி லஞ்சம் பெற்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக்கொடுத்ததும் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
The High Court prohibits the investigation of the enforcement department

சென்னையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். மேலும் சுமார் ரூ. 50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. எனவே தங்கள் நிறுவனத்தின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (19.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன், இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

இருபதாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு; பிப்.19ல் தீர்ப்பா?

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Extension of judicial custody for the twentieth time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

அதே சமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அண்மையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இது தொடர்பான மனு நேற்று (14-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வும் நிறைவு, அனைத்து ஆதாரங்களை தாக்கல் செய்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறிவிட்டது. வழக்கில் தொடர்புடைய யாரும் யாருடைய வீட்டுக்கும் நேரில் சென்று மிரட்டல் விடுப்பதில்லை. மறைமுகமாக ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால் சிறையில் இருந்தும் கூட ஒருவரால் அச்சுறுத்த முடியும். அமலாக்கத்துறை முன்வைத்த அனைத்து வாதங்களும் செல்லாதவை ஆகிவிட்டன.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுதலாக ஆதாரத்தைப் பதிவு செய்துவிட்டதாக வழக்கு விசாரணையின் போது அது பற்றி விளக்கக் கோருகிறது அமலாக்கத்துறை. தற்போதைய நிலையில், திருத்தப்படாத ஆதாரங்களைக் கொண்டு தங்கள் தரப்பை வாதிட அமலாக்கப் பிரிவுக்கு வழி இல்லை. தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினால், செந்தில் பாலாஜியை விடுவித்தாக வேண்டும். அதனால், 270 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் இன்று நடைபெற்றது. அதில், செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதைப்போல் எந்த ஆவணங்களையும் திருத்தம் செய்யவில்லை. அனைத்து ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுத்தான் செய்தோம். சாட்சி விசாரணையை தொடங்க உள்ளோம் என்ற வாதங்களை அமலாக்கத்துறை வைத்தது.

தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதுவரை இருபதாவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான அமலாக்கத்துறையின் வாதம் இன்று முடிந்த நிலையில், வழக்கு பிப். 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்.19 ஆம் தேதி இந்த வழக்கில் ஒருவேளை தீர்ப்பளிக்கப்படலாம்  எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.