சென்னை திருநின்றவூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் மகன் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பெற்றோர் திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு சுமார் 7 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவான பள்ளித் தாளாளர் மகன் மீது போக்சோ மற்றும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று வினோத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக ஒருவரை முடக்க முடியுமானால் அது தவறு. நேர்மையாக குழந்தைகளுக்காக எத்தனையோ ஆசிரியர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் சாகிறேன். ஒரு ஆசிரியர் தன் சுயநலத்திற்காக இவ்வாறு செய்ய முடியுமானால் அது நியாயமில்லை. இது என்னுடைய மரண வாக்குமூலம்” எனக் கூறியிருந்தார்.
நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் இருமுறை விஷம் அருந்தியதாக குறிப்பிட்ட வினோத் வீடியோவில் பேசும் பொழுதும் விஷம் அருந்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வினோத் கோவாவில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் நேற்று திருநின்றவூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் கோவா விரைந்த தனிப்படை நேற்று நள்ளிரவு வினோத்தை கைது செய்தனர்.
வினோத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவரை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்தை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.