'Toppur Pass' - What is the solution to the killer road?

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு முன்பே இதேபோல தொப்பூர் பகுதியில் கணவாயில் எண்ணிலடங்காமிகப் பெரும் விபத்துக்கள் நிகழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் இன்று (28/02/2024) காலை அங்கு ஏற்பட்ட விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதியதில் கார்கள் உட்பட ஐந்து வாகனங்கள் தொடர்ச்சியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

n

Advertisment

சில நாட்களுக்கு முன்பு தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை மிகவும் கண்டித்து 'நடந்தது விபத்து அல்ல மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொலை' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வாயிலாகத்தெரிவித்திருத்தார். அதில், 'சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்ததுவிபத்து அல்ல... மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரூ.775 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொப்பூர் பகுதியில் விபத்து நடக்காதுஎன்று நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. தொப்பூர் கொலைகாரச் சாலையில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

Advertisment

மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

அதேநேரம் அங்கு நிகழும்விபத்துகளுக்குபிற்போக்குத்தனமாக அமானுஷ்யங்களேகாரணம் என உள்ளூர் வாசிகள் சிலரால் நம்பப்படுகிறது. ஆம்புலன்ஸ் சத்தங்கள் அந்தப்பகுதிமக்களுக்கு சாதாரணம் என்ற அளவிற்கு விபத்துகள் சாதாரணமாகிவிட்ட நிலையில், தொப்பூர் கணவாய் விபத்துகளுக்கு தீர்வு வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின்ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது.