வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலருக்கும் இன்று அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான பால் பாக்கெட்கள் கிடைக்காததால் பொது மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “சென்னையில் நாளை (06.12.2023) காலை முதல் பால் விநியோகம் முழுமையாக சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், “சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்படும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்காக அதிகளவில் மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.