தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழை நீரை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை அசோக் நகர், வடபழனி, தியாகராயநகர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அம்பத்தூர், கொடுங்கையூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அயனாவரம், எண்ணூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை (4/11/2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக நாளை (4/11/2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாளும் (5/11/2022) புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.