தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் மற்றும் அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது.
அதன் காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் நேற்று (17.07.2024) ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (18.07.2024) ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் ரேசன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது வெளிச் சந்தைகளை விட பண்ணை பசுமைக் கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை குறைவாக விற்கப்படுகிறது.