Tomato price hike Minister Periyakaruppan consultation today

Advertisment

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

இதையடுத்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தக்காளியின் மொத்த விற்பனை விலை சற்று குறைந்திருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று மீண்டும் மொத்த விற்பனையில் தக்காளி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி மொத்த விற்பனை விலை நேற்றைய விலையை விட 20 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் தேவை அதிகம் இருக்கும் சூழலில் வரத்து குறைவு காரணமாகத்தக்காளியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் 150 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் தக்காளி விலை உயர்வு குறித்தும், விலையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.