
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நேற்று காலை 07.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 07.00 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் 77 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

ஒருபுறம் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், தமிழகத்தில் பல இடங்களில் திமுக, அதிமுக சார்பில் பணம் விநியோகிக்கப்பட்டு சில இடங்களில் சம்பந்தபட்டவர்கள் கைதும் செய்யப்பட்டனர். பணம், பரிசுபொருட்கள் தருவதைப் போன்றே, பணம் மற்றும் பரிசுப் பொருட்களுக்களைப் பின்னர் பெறுவதற்கான டோக்கன்களும் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் சார்பில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டன. முதலில் டோக்கன் கொடுத்து பின்னர் ஏமாற்றிவிடுவார்கள் என பல இடங்களில் மக்கள் டோக்கன்களை வாங்க மறுத்த சம்பவமும் அரங்கேறின. இந்நிலையில் மக்களுக்குப் போலி டோக்கன்களைக் கொடுத்து வேட்பாளர் ஏமாற்றிய சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை கும்பகோணத்தில் வேட்பாளர் ஒருவர் டோக்கன் ஒன்றைக் கொடுத்து, “குறிப்பிட்ட மளிகை கடையில் இதைக் காட்டி 2 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்” என கூறியுள்ளார். இதனை நம்பி டோக்கனை வாங்கிய மக்கள், குறிப்பிட்ட மளிகைக் கடையை நோக்கி படையெடுக்க, அதிர்ந்துபோன மளிகை கடைக்காரர், “வேட்பாளர் கொடுத்த டோக்கனுக்கும் எங்கள் மளிகை கடைக்கும் சம்பந்தமில்லை” என கூறி அனுப்பியுள்ளார். மக்கள் அதிகம் பேர் டோக்கனோடு வருவதால் அதிர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் இறுதியாக, ''வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது; இந்த டோக்கனிக்கிற்கு எங்கள் கடை பொறுப்பேற்காது'' என கடைமுன் அறிவிப்பை ஒட்டியுள்ளார். இப்படி டோக்கன் கொடுத்து ஏமாற்றப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுக்குப் பணம் வாங்கக்கூடாது என எவ்வளவுதான் விழிப்புணர்வு செய்தாலும், வாக்குக்குப் பணம் கொடுக்கும் செயலுக்கும், பணம் வாங்கும் செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த தேர்தல் டோக்கன் கலாச்சாரமும் இப்படி ஒருபக்கம் தேர்தல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாகியுள்ளது.