குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில், குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரியிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகளைக் காப்பாற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருவதாக, மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் எந்தத் தொய்வும் இல்லை என்றும், மனுதாரரின் கோரிக்கை அடிப்படை ஆதரமற்றது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதையும் மீறி விற்கப்படும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.