சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.
இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம். நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.