டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு எழுத உள்ள தகுதி வாய்ந்த நபர்களுக்கு, சேலத்தில் மாதிரி தேர்வுகள் மே 8 மற்றும் 15- ஆம் தேதிகளில் நடக்கிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, "டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தால் தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ பிரிவுகளில் முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இரண்டு இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இத்தேர்வு, மே 8 மற்றும் 15- ஆம் தேதிகளில் நடைபெறும். மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள், தேர்விற்கு விண்ணப்பித்த நகல், பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காலை 09.00 மணிக்கு மேல் வரும் நபர்கள், மாதிரி தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாதிரி தேர்வு தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற 0427- 2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தகுதி வாய்ந்த நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.