தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 40- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் இடைத்தரகராக ஜெயக்குமாரும், சித்தாண்டியும் செயல்பட்டது தெரியவந்ததால், அவர்களின் இல்லங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் 7 நாள் அவரை போலீஸ் காவலில் எடுத்து, முறைகேடு நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. இந்நிலையில் 7 நாள் போலீஸ் காவல் முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தற்போது வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் நண்பர் செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்பதும், மூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குரூப் 4 முறைகேடு வழக்கு தொடர்பாக பிரபாகர் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து பிரபாகரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.