Skip to main content

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Electricity hike should be rolled back immediately EPS Emphasis

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள  திமுக அரசுக்கு என் கடும் கண்டனம்.

பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு? ‘சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!. மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும்  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
All party meeting led by CM MK Stalin

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று  முன்தினம் (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து ஜூலை 15 ஆம் தேதி முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (16.07.2024) காலை 11.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முதல்வர் மு .க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.